மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு.800 மாசு அற்றார் கேண்மை மருவுக - உலகோடு ஒத்துக் குற்றமற்றார் நட்பினையே பயில்க; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக - உலகோடு ஒத்தலில்லார் நட்பினை அறியாது கொண்டாராயின், அவர் வேண்டியதொன்றனைக் கொடுத்தாயினும் விடுக. (உலகோடு ஒத்தார் நட்பு இருமை இன்பமும் பயத்தலின், 'மருவுக' என்றும், அதனோடு மாறாயினார் நட்புத் துன்பமே பயத்தலின், அதன் ஒழிவை 'விலை கொடுத்தும் கொள்க' என்றும் கூறினார். இதனான் அவ்விருமையும் தொகுத்துக் கூறப்பட்டன.) அதிகாரம் 81. பழைமை[ அஃதாவது , நட்டாரது பழையராந்தன்மை பற்றி அவர் பிழைத்தன பொறுத்தல் , காரணப் பெயர் காரியத்திற்கு ஆயிற்று , ஆராய்ந்து நட்கப்பட்டார் எனினும் பொறுக்கப் படும் குற்றமுடை யராகலானும் ஊழ்வகையானும் நட்டார் மாட்டுப் பிழையுளதாம் என்பது அறிவித்தற்கு , இது நட்பு ஆராய்தலின் பின் வைக்கப்பட்டது .]
பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. 801 பழைமை எனப்படுவது யாது எனின் - பழைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு - அது பழைமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும் நட்பு. ('கிழமை' ஆகுபெயர். 'கெழுதகைமை' என வருவனவும் அது. உரிமையால் செய்வனவாவன, கருமமாயின செய்யுங்கால் கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்கு வேண்டியன தாமே கோடல், பணிவு அச்சங்கள் இன்மை என்றிவை முதலாயின. சிதைத்தல் - விலக்கல். இதனான், 'பழைமையாவது காலம்சென்றதன்று, இப்பெற்றித்தாய நட்பு' என்பது கூறப்பட்டது.)நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற் குப்பாதல் சான்றோர் கடன். 802
|