பக்கம் எண் :

323
நோதக்க நட்டார் செயின் - தாம் வெறுக்கத் தக்கவனவற்றை நட்டார் செய்தாராயின்; பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்று உணர்க - அதற்குக் காரணம் ஒன்றில் பேதைமை என்றாதல் ஒன்றின் மிக்க உரிமை என்றாதல் கொள்க. ('ஒன்றோ' என்பது எண்ணிடைச்சொல். 'செயின்' எனவே, தம் இயல்பால் செய்யாமை பெற்றாம். இது வருகின்றவற்றுள்ளும் ஒக்கும் இழவூழான் வரும் பேதைமை யாவர்க்கும் உண்மையின் தமக்கு ஏதங்கொண்டாரென்றாதல், ஊழ்வகையான் எம்மின் வரற்பாலது ஒற்றுமை மிகுதி பற்றி அவரின் வந்ததென்றாதல் கொள்வதல்லது. அன்பின்மையென்று கொள்ளப்படாது என்பதாம். கெடும் வகை செய்யின் அதற்குக் காரணம் இதனான் கூறப்பட்டது.)

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

806
எல்லைக்கண் நின்றார் - நட்பு வரம்பு இகவாது அதன் கண்ணே நின்றவர்; தொல்லைக்கண் நின்றார் தொடர்பு தொலைவிடத்தும் துறவார் - தம்மொடு பழைமையின் திரியாது நின்றாரது நட்பினை அவரால் தொலைவு வந்தவிடத்தும் விடார். (பழைமையின் திரியாமை - உரிமையொழியாமை. தொலைவு - பொருட்கேடும் போர்க்கேடும்.)

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

807
அழிவந்த செய்யினும் அன்பு அறார் - நட்டார் தமக்கு அழிவு வந்தவற்றைச் செய்தாராயினும் அவர் மாட்டு அன்பு ஒழியார்; அன்பின் வழிவந்த கேண்மையவர் - அன்புடனே பழையதாய் வந்த நட்பினை உடையார். ('அழி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். அழிவு - மேற்சொல்லிய கேடுகள். இவை இரண்டு பாட்டானும் கேடு செய்தக்கண்ணும் நட்பு விடற்பாற்றன்று என்பது கூறப்பட்டது.)

கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள்இழுக்கம் நட்டார் செயின்.

808
கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு - நட்டார் செய்த பிழையைத் தாமாகவே யன்றிப் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமை அறியவல்லார்க்கு; நட்டார் இழுக்கம் செயின் நாள் - அவர் பிழை செய்வாராயின் அது பயன்பட்ட நாளாம்.