பக்கம் எண் :

325
அதனை இரு வகைப்படுத்து இரண்டு அதிகாரத்தால் கூறுவான் தொடங்கி , முதற்கண் தீநட்புக் கூறுகின்றார். அஃதாவது, தீக்குணத்தாரோடு உளதாய நட்பு, குணத்தின் தீமை ஒற்றுமை பற்றி உடையார் மேற்றாய், அது பின் அவரோடு செய்த நட்பின் மேற்றாயிற்று. அதிகாரமுறைமை கூறாமையே விளங்கும் .]

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது.

811
பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை - காதல் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது - வளர்தலின் தேய்தல் நன்று. ('பருகு வன்ன அருகா நோக்கமொடு' (பொருநர்.78)என்றார் பிறரும். நற்குணமில்லார் எனவே, தீக்குணமுடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது. பெருகினால் வரும் கேடு குன்றினால் வாராமையின், 'குன்றல் இனிது' என்றார். இதனால், தீ நட்பினது ஆகாமை பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.)

உறின்நட் டறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.

812
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை - தமக்குப் பயனுள்வழி நட்புச் செய்து அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பினை; பெறினும் இழப்பினும் என் - பெற்றால் ஆக்கம் யாது? இழந்தால் கேடு யாது? (தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தமிலராகலின், அவரை 'ஒப்பிலார்' என்றார். அவர் மாட்டு நொதுமல் தன்மையே அமையும் என்பதாம்.)

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.

813
உறுவது சீர் தூக்கும் நட்பும் - நட்பு அளவு பாராது அதனால் வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும்; பெறுவது கொள்வாரும் - கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும் பொதுமகளிரும்; கள்வரும் - பிறர்கேடு நோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும்; நேர் - தம்முள் ஒப்பர்.