(நட்பு - ஆகுபெயர். பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின் கணிகையர் கள்வர் என்றிவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தமககு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை கூறப்பட்டது.) அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை.814 அமரகத்து ஆற்று அறுக்கும் கல்லா மாஅன்னார் தமரின் - அமர்வாராத முன்னெல்லாம் தாங்குவது போன்று வந்துழிக்களத்திடை வீழ்த்துப்போம் கல்வி இல்லாத புரவி போல்வாரது தமர்மையில்; தனிமை தலை - தனிமை சிறப்பு உடைத்து. (கல்லாமை - கதி ஐந்தும், சாரி பதினெட்டும், பொருமுரணாற்றலும் அறியாமை. துன்பம் வாராத முன்னெல்லாந் துணையாவார் போன்று, வந்துழி விட்டு நீங்குவர் என்பது உவமையாற் பெற்றாம். அவர் தமரானால் வரும் இறுதி தனியானால் வாராமையின், தனிமையைத் 'தலை' என்றார். எனவே, அதுவும் தீதாதல் பெறும்.)செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று. 815 செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை - செய்து வைத்தாலும் அரணாகாத கீழ் மக்களது தீ நட்பு; எய்தலின் எய்தாமை நன்று - ஒருவர்க்கு உண்டாதலின் இல்லையாதல் நன்று. (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. அரணாகாமை - தொலைவின்கண் விட்டு நீங்குதல். 'எய்தலின் எய்தாமை நன்று' என்பதற்குமேல் உரைத்தாங்கு உரைக்க. 'சாராத' என்னும் பெயரெச்சம் கேண்மை என்னும் பெயர் கொண்டது, 'சிறியவர்' என்பதனைக் கொள்ளின், 'செய்து' என்பது நின்று வற்றும். இவை இரண்டு பாட்டானும் தெலைவில் துணையாகாத நட்பின் தீமை கூறப்பட்டது.)பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும். 816 பேதை பெருங்கெழீஇ நட்பின் - அறிவிலானது மிகச் சிறந்த நட்பின்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் - அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று.
|