கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.819 வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு - வினையும் சொல்லும் ஒவ்வாது வேறு வேறாயிருப்பார் நட்பு; கனவினும் இன்னாது - நனவின் கண்ணே அன்றிக் கனவின் கண்ணும் இன்னாது. (வினை, சொற்களது ஒவ்வாமை முதல்மேல் ஏற்றப்பட்டது. அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்தல். நிகழ்வின்கண் உளதாயிருத்தலால் 'கனவினும் இன்னாது' என்றார். உம்மை எச்ச உம்மை, இழிவு சிறப்பு உம்மையும் ஆம். மன்னும் ஓவும் அசை நிலை.)எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு. 820 மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு - தனியே மனைக்கண் இருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின்கண் இருந்து பழி கூறுவார் நட்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் - சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க. (மனைக்கண் கெழுமலும் மன்றின்கண் பழித்தலும் தீது ஆகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகா வகை குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் வஞ்சர் நட்பின் தீமை கூறப்பட்டது.) அதிகாரம் 83. கூடா நட்பு[ இனி , ஏனைக் கூடா நட்புக் கூறுகின்றார் . அஃதாவது , பகைமையான் அகத்தாற் கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறுந்துணையும் புறத்தாற் கூடியொழுகுவார் நட்பு.]
சீர்இடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. 821 நேரா நிரந்தவர் நட்பு - கூடாதிருந்தே தமக்கு வாய்க்கும் இடம் பெறுந்துணையும் கூடியொழுகுவார் நட்பு; சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை - அது பெற்றால் அற எறிதற்குத் துணையாய பட்டடையாம். (எறியும் எல்லை வாராமுன் எல்லாம் தாங்குவது போன்றிருந்து வந்துழி அற எறிவிப்பதாய பட்டடைக்கும் அத்தன்மைத்தாய நட்பிற்கும் தொழிலொப்புமை உண்மையான், |