மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற் றன்று.825 மனத்தின் அமையாதவரை - மனத்தால் தம்மொடு மேவாதாரை; எனைத்து ஒன்றும் சொல்லினால் தேறல்பாற்று அன்று - யாதாரு கருமத்தினும் சொல்லால் தெளிதல் முறைமைத்தன்று, நீதிநூல். ('நீதி நூல்' என்பது அவாய் நிலையான் வந்தது. பகைமை மறைத்தற்பொருட்டுச் சொல்லுகின்ற வஞ்சனைச் சொல்லைச் செவ்விய சொல் எனக் கருதி, அவரைக் கருமங்களில் தெளிதல் நீதிநூல் முறைமை அன்று என்பதாம்.)நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். 826 நட்டார்போல் நல்லவை சொல்லினும் - நட்டார் போன்று நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும்; ஒட்டார் சொல் 'ஒல்லை உணரப்படும்' - பகைவர் சொற்கள் அது பயவாமை அச்சொல்லிய பொழுதே அறியப்படும். ('சொல்லினும்' எனவே, சொல்லாமையே பெற்றாம். ஒட்டாராதலால் தீமை பயத்தல் ஒருதலை என்பார், 'ஒல்லை உணரப்படும்' என்றார்.)சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். 827 வில்வணக்கம் தீங்கு குறித்தமையான் - வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தமையால்; ஒன்னார் கண் சொல் வணக்கம் கொள்ளற்க - பகைவர் மாட்டுப் பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும் தமக்கு நன்மை செய்தலைக் குறித்தது என்று கருதற்க. '(தம் வணக்கம் அன்று என்பது தோன்றச் 'சொல்வணக்கம்' என்றும் வில்வணக்கம் வேறாயினும் வணங்குதல் ஒப்புமைபற்றி அதன் குறிப்பை ஏதுவாக்கியும் கூறினார். வில்லினது குறிப்பு அவனினாய வில்வணக்கத்தின்மேல் நிற்றலான். ஒன்னாரது குறிப்பும் அவரினாய சொல்வணக்கத்தின் மேலதாயிற்று. இதுவும் தீங்கு குறித்த வணக்கம் என்றே கொண்டு அஞ்சிக் காக்க என்பதாம். இவை மூன்று பாட்டானும் 'அவரைச் சொல்லால் தெளியற்க' என்பது கூறப்பட்டது.) |