பக்கம் எண் :

332
பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்
டகம்நட் பொரீஇ விடல்.
830
பகை நட்பாம் காலம் வருங்கால் - தம் பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுங்காலம் வந்தால்; முகம் நட்டு அகம் ஒரீஇ விடல் - தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க. (அக்காலமாவது, தம்மானும் பகையென்று வெளிப்பட நீக்கலாகாத அளவு. இதனானே, ஆமளவெல்லாம் நீக்குக என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் அந்நட்பினை ஒழுகுமாறு கூறப்பட்டது.)

அதிகாரம் 84. பேதைமை

[ இனி , அந்நட்பினை எதிர்மறுத்துப் பகை முகத்தாற் கூறிய தொடங்கினார் . அப் பகைதான் முற்றக் கடியுங் குற்றமன்மையின் உளவாய வெகுளியானும் காமத்தானும் வருவதாம் . அவற்றுள் வெகுளியான் வருவன ஐந்துஅதிகாரத்தானும் , காமத்தான் வருவன ஐந்து அதிகாரத்தானும் கூறுவார் , அவ்விரண்டற்கும் அடியாய மயக்கத்தை இரு வகைப்படுத்து , இரண்டு அதிகாரத்தால் கூறுவான் தொடங்கி , முதற்கண் பேதைமை கூறுகின்றார் . அஃதாவது , யாதும் அறியாமை .]

பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்.

831
பேதைமை என்பது ஒன்று - பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைய குற்றங்கள் எல்லாவற்றினும் மிக்கதொன்று; யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் - அதுதான் யாதென்று வினவின், தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல். (கேடு - வறுமை, பழி, பாவங்கள், ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள், தானே தன் இருமையும் கெடுத்துக் கோடல் என்பதாம்.)

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்.

832