பேதை - பேதையாயினான்; எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை; ஒருமைச் செயல் ஆற்றும் - இவ்வொரு பிறப்புள்ளே செய்து கொள்ள வல்லனாம். (எல்லாப் பிறப்பும் ஏழாய் அடங்குதல் அறியப்பட்டமையின், முற்று உம்மை கொடுத்தார். அழுந்துதற்கு இடனாய நிரயம், ஈண்டைப் பிறப்புக்களிலும் கொடுவினை வயத்தால் அந் 'நிரயத்' துன்பமே உழந்து வருதலின், 'எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு' என்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத்துன்பம் உழத்தற்கு ஏதுவாம் கொடுவினைகளையே அறிந்து சில காலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்கு அரிதாகலின், 'ஆற்றும்' என்றார். இதனான் அவன் மறுமைச்செயல் கூறப்பட்டது.) பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேல் கொளின். 836 கை அறியாப் பேதை வினைமேற் கொளின் - செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வானாயின், பொய்படும் ஒன்றோ புனைபூணும் - அதுவும் புரைபடும், தானும் தளை பூணும். (புரைபடுதல் - பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.)ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை. 837 பேதை பெருஞ்செல்வம் உற்றக்கடை - பேதையாயினான் பெரிய செல்வத்தைத் தெய்வத்தான் எய்திய வழி; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் - தன்னோடு ஓர் இயைபும் இல்லாதார் நிறைய,` எல்லா இயைபும் உடைய தமராயினார் பசியாநிற்பர். (எல்லா நன்மையுஞ் செய்துகோடற் கருவி என்பது தோன்ற 'பெருஞ்செல்வம்' என்றும், அதனைப் படைக்கும் ஆற்றல் இல்லாமை தோன்ற 'உற்றக்கடை' என்றும், எல்லாம் பெறுதல் தோன்ற 'ஆர' என்றும், உணவும் பெறாமை தோன்றப் 'பசிப்பர்' என்றும் கூறினார்.)மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன் றுடைமை பெறின். 838
|