பக்கம் எண் :

335
பேதை தன் கை ஒன்று உடைமை பெறின் - பேதையாயினான் தன் கைக்கண்ணே ஒன்றனை உடைமையாகப் பெற்றானாயின்; மையல் ஒருவன் களித்தற்று - அவன் மயங்குதல் முன்னே பித்தினை உடையானொருவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கினாற்போலும். ('பெறின்' எனவே, தெய்வத்தான் அன்றித் தன்னாற் பெறாமை பெற்றாம். பேதைமையும் செல்வக் களிப்பும் ஒருங்கு உடைமையால் அவன் செய்வன, மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோல் தலை தடுமாறும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் செல்வம் எய்தியவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது.)

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.

839
பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் - பின் பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது. (நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.)

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.

840
சான்றோர் குழாத்துப் பேதை புகல் - சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்; கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று - தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற் போலும். (கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு. இதனால் அவ்வமளியும் இழிக்கப்படுமாறு போல, இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம். இதனான், அவன் அவையிடை இருக்குமாறு கூறப்பட்டது.)

அதிகாரம் 85. புல்லறிவாண்மை

[ இனி , ஏனைப் புல்லறிவாண்மை கூறுகின்றார் . அது புல்லிய அறிவினை ஆள்தல்
தன்மை என விரியும் . அஃதாவது , தான் சிற்றறிவினனாயிருந்தே தன்னைப் பேரறிவினனாக மதித்து உயர்ந்தோர்கூறும் உறுதிச்சொல் கொள்ளாமை.]