பக்கம் எண் :

337

(பகைவர் தாம் அறிந்ததொன்றனைக் காலம் பார்த்திருந்துசெய்வதல்லது வறுமை, பழி, பாவம் முதலிய பலவற்றையும்எக்காலத்தும் செய்யமாட்டாமையின், அவர்க்கும் செய்தல்அரிதென்றார். இதனான் அவர் தம் மாட்டும் தீயன செய்தல்அறிவர் என்பது கூறப்பட்டது.)

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
844
வெண்மை எனப்படுவது யாது எனின் - புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; யாம் ஒண்மை உடையம் என்னும் செருக்கு - அது தம்மைத் தாமே யாம் நல்லறிவுடையம் என்று நன்கு மதிக்கும் மயக்கம். (வெண்மையாவது அறிவு முதிராமை. ஒண்மை எனக் காரியப் பெயர் காரணத்திற்காயிற்று. உலகத்தார் இகழ்தல் அறிந்து வைத்தும் அவ்வாறு மதித்தலான், 'மயக்கம்' என்றார்.)

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.

845
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் - புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையும் கற்றாராகத் தாம் மேலிட்டுக் கொண்டு ஒழுகுதல்; கசடு அற வல்லதூஉம் ஐயம் தரும் - கசடறக் கற்றதொரு நூலுண்டாயின் அதன்கண்ணும் பிறர்க்கு ஐயத்தை விளைக்கும். (வல்லது என ஏழாவது இறுதிக்கண்தொக்கது, 'உண்டாயின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயம், 'அது வல்லர் என்பதூஉம் இவ்வாறு கொல்லோ' என்பது.)

அற்றம் மறைத்தாலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.

846
தம் வயின் குற்றம் மறையாவழி - புல்லறிவாளர் தம்கண் நிகழும் குற்றங்களை அறிந்து கடியாராயின்; அற்றம் மறைத்தலோ புல்லறிவு - ஆடையால் அற்றம் மறைத்தாராகக் கருதுதலும் புல்லறிவாம். (குற்றம் மறைத்தலாவது, அவற்றை இலவாக்குதல். மறைக்கப்படுவன பலவற்றுள்ளும் உயர்ந்தவற்றை எல்லாம் மறையாது தாழ்ந்த தொன்றனையே மறைத்து, அவ்வளவால் தம்மையும் உலக ஒழுக்கினராக மதித்தலும் புல்லறிவென்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் தம்மை வியத்தற்குற்றம் கூறப்பட்டது.)