பக்கம் எண் :

339

காணாதான் தான் கண்டவாறு கண்டானாம் - இனி அவ்வறியுந் தன்மையில்லாதான் கொண்டது விடாமையான் தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தானாய் முடியும்; (புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொள்ளுதல் ஒருவாற்றானும் இயைவதன்று என்பதாம்.)

உலகத்தார் உண்டென்ப தில்என்பான் வையத்
தலகையா வைக்கப் படும்.

850

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் -உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளைத்தன் புல்லறிவால் இல்லை என்று சொல்லுவான்; வையத்துஅலகையா வைக்கப்படும் - மகன் என்று கருதப்படான்,வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும். (கடவுளும், மறுபிறப்பும், இருவினைப் பயனும் முதலாக அவர் உள என்பன பலவேனும், சாதி பற்றி உண்டு என்றும், தானே வேண்டியகூறலால் ஒப்பும், வடிவால் ஒவ்வாமையும் உடைமையின் தன் யாக்கை கரந்து மக்கள் யாக்கையுள் தோன்றுதல்வல்ல 'அலகை' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும்உறுதிச்சொல் கொள்ளாமையது குற்றம் கூறப்பட்டது.)

அதிகாரம் 86. இகல்

[ இனி , அவற்றாள் வரும் வெகுளி காமங்களுள் அரசர்க்கு வெகுளி பெரும்பான்மைத்தாகலின் , அதனான் வருவன கூறுவான் தொடங்கி , முதற்கண் இகல் கூறுகின்றார் . அஃதாவது , இருவர் தம்முள் பொருது வலிதொலைதற்கு ஏதுவாய மாறுபாடு.]

இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.

851

எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய் - எல்லா உயிர்கட்கும் பிறஉயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப - இகல் என்று சொல்லுவர் நூலோர்.