(மக்களையும் விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லாஉயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்றுவிளைத்தலின் 'பகல் என்னும் பண்பு இன்மை' என்றும்கூறினார். நற்குணம் இன்மை அருத்தாபத்தியால் தீக்குணமாயிற்று.இதனான் இகலது குற்றம் கூறப்பட்டது.) பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை.852 பகல் கருதிப் பற்றா செயினும் - தம்மொடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்; இகல் கருதி இன்னாசெய்யாமை தலை - அவனொடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது. (செய்யின் பகைமை வளரத் தாம் தாழ்ந்து வரலானும், ஒழியின் அப்பற்றாதன தாமே ஓய்ந்து போகத் தாம் ஓங்கி வரலானும், 'செய்யாமை தலை' என்றார். 'பற்றாத' என்பது விகாரமாயிற்று.)இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத் தாவில் விளக்கம் தரும். 853 இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் - அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும். (தவல் இல்லாமை, அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாஇல் விளக்கம் - வெளிப்படை. யாவரும் நண்பராவர், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களால் புகழ் பெறும் என்பதாம்.)இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும் துன்பத்துள் துன்பம் கெடின். 854 இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும் - அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும்.
|