வெற்றி - வழிநின்றார்க்கு உளதாவது. காணப்படும் பயத்ததாகலின், 'மெய்ந்நூல்' எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார். இவை இரண்டு பாட்டானும்இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.) இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு.858 இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் - தன் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை எதிர்தலையொழிதல் ஒருவனுக்கு ஆக்கம் ஆம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம் - அது செய்யாது அதன்கண் மிகுதலை மேற்கொள்வானாயின் கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும். (எதிர்தல் - ஏற்றுக்கோடல், சாய்ந்த பொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.)இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு. 859 ஆக்கம் வருங்கால் இகல் காணான் - ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணம் உண்டாயினும் இகலை நினையான்; கேடுதரற்கு அதனை மிகல் காணும் - தனக்குக் கேடு செய்து கோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும். (இகலான் வருங்கேடு பிறரான் அன்றென்பது தோன்ற, 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை உண்மைகள் என்பதாம்.)இகலான்ஆம் இன்னாத எல்லாம் நகலான்ஆம் நன்னயம் என்னும் செருக்கு. 860 இகலான் இன்னாத எல்லாம் ஆம் ஒருவனுக்கு - மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்; நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம் - நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம். (இன்னாதன - வறுமை,பழி,பாவம் முதலாயின. நகல் - மகிழ்தல். 'நகல்' என்பதூஉம் 'செருக்கு' என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்கு' எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.)
|