பக்கம் எண் :

354
அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை

[ அஃதாவது , பெரியராயினாரை அவமதித்து ஒழுகாமை , ' இரட்டுற மொழிதல் ' என்பதனால் ,பெரியார் என்பது , ஆற்றலாற் பெரியாராய வேந்தர்மேலும் , தவத்தால் பெரியாராய முனிவர் மேலும் நின்றது .மேற்சொல்லாது எஞ்சி நின்றதுஆகலின் , இது வெகுளியான் வருவனவற்றது இறுதிக்கண் வைக்கப்பட்டது.]

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

891
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக்கொண்டன யாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை அவமதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தங்கண் தீங்கு வாராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது. (ஆற்றல் என்பது பெருமை,அறிவு,முயற்சி என்னும் மூன்றன் மேலும் நிற்றலின், சாதியொருமை. இகழ்ந்தவழி களைய வல்லார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும், அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான் அழியுமாகலின் அவ்விகழாமையைத் தலையாய காவல் என்றும் கூறினார். பொதுவகையால் அவ்விருதிறத்தாரையும் பிழையாமையது சிறப்பு இதனால் கூறப்பட்டது.)

பெரியாரைப் பேணா தொழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.

892
பெரியாரைப் பேணாது ஒழுகின் - ஆற்றல்களால் பெரியராயினாரை வேந்தன் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவாராயின், பெரியாரால் பேரா இடும்பை தரும் - அவ்வொழுக்கம் அப்பெரியாரால் அவர்க்கு எஞ்ஞான்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும். (அத்துன்பங்களாவன, இருமையினும் இடையறாது வரும் மூவகைத் துன்பங்களும் ஆம்,