பக்கம் எண் :

355

அவையெல்லாம் தாமே செய்துகொள்கின்றனர் என்பது தோன்ற, ஒழுக்கத்தை வினை முதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். பொது வகையால் அவரைப் பிழைத்தற்குற்றம் இதனாற் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையாற் கூறுப.)

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
893
அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு - வேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர்மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாதுசெய்க - தான் கெடுதல் வேண்டினானாயின், ஒருவன் நீதிநூலைக் கடந்து செய்க. (அப்பெரியாரைக் 'காலனும் காலம் பார்க்கும் பாராது -வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய - வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தர்' (புறநா.41) என்றார் பிறரும்.நீதி நூல் 'செய்யலாகாது' என்று கூறலின், 'கேளாது' என்றார்.)

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
காற்றாதார் இன்னா செயல்.

894
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் - மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று - தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.)

யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.

895
வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் - பகைவர்க்குவெய்தாய வலியினையுடைய வேந்தனால் செறப்பட்ட அரசர்; யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் -அவனைத் தப்பி எங்கே போயுளராவார், ஓரிடத்தும் உளராகார்.