அதிகாரம் 92.வரைவில் மகளிர் [ அஃதாவது தம்நலம் விலைகொடுப்பார் யாவர்க்கும் விற்பதல்லது , அதற்கு ஆவார் ஆகாதார் என்னும் வரைவு இலாத மகளிரது இயல்பு ; ஆதலால் , தமக்குரிய மகளிரான் வருங்குற்றத்தின்பின் வைக்கப்பட்டது.]
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும். 911 அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய் தொடியார் - ஒருவனை அன்புபற்றி விழையாது பொருள்பற்றி விழையும் மகளிர்; இன்சொல் இழுக்குத் தரும் - அது கையுறும் துணையும் தாம் அன்பு பற்றி விழைந்தாராகச் சொல்லும் இனிய சொல் அவனுக்குப் பின் இன்னாமையைப் பயக்கும். (பொருள் என்புழி 'இன்' விகாரத்தால் தொக்கது. ஆய்ந்த தொடியினையுடையார் என்றதனாலும், இனிய சொல் என்றதனாலும், அவர் கருவி கூறப்பட்டது. அச்சொல் அப்பொழுதைக்கு இனிதுபோன்று பின் வறுமை பயத்தலின் அது கொள்ளற்க என்பதாம்.)பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல். 912 பயன் தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர் - ஒருவனுக்கு உள்ள பொருளை அளந்தறிந்து, அஃது எய்தும் துணையும் தம் பண்புடைமை சொல்லும் பண்பில்லாத மகளிரது; நயன் தூக்கி நள்ளாவிடல் - ஒழுகலாற்றினை ஆராய்ந்தறிந்து அவரைப் பொருந்தாது விடுக. (பண்பு, சொல்லின்கண் அல்லது தங்கண் கிடவாமை தோன்றப் 'பண்பு இல் மகளிர்' என்றும், அவர்க்கு அது சாதி தருமமாதல் நூலானேயன்றி அவர் செயலானும் அறிந்தது என்பார், 'நயன் தூக்கி' என்றும் அவ்வறிவு அவரை விடுவதற்கு உபாயம் என்பதுதோன்றப் பின் 'நள்ளாவிடல்' என்றும் கூறினார்.) |