பக்கம் எண் :

369
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.
929
களித்தானைக் காரணம் காட்டுதல் - கள்ளுண்டு களித்தான் ஒருவனை இஃது ஆகாதென்று பிறனொருவன் காரணம் காட்டித் தெளிவித்தல்; நீர்க்கீழ்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று - நீருள் மூழ்கினான் ஒருவனைப் பிறனொருவன் விளக்கினால் நாடுதலை யொக்கும். ('களித்தானை' என்னும் இரண்டாவது, 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானோ' (கலித்.மருதம் -7) என்புழிப்போல நின்றது. நீருள் விளக்குச் செல்லாதாற்போல அவன் மனத்துக் காரணம் செல்லாது என்பதாம். இதனான் அவனைத் தெளிவித்தல் முடியாது என்பது கூறப்பட்டது.)

கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

930
கள் உண்ணாப் போழ்தில் களித்தானை - கள் உண்பானொருவன் தான் அஃது உண்ணாது தெளிந்திருந்த பொழுதின்கண் உண்டுகளித்த பிறனைக் காணுமன்றே; காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான் கொல் - காணுங்கால் தான் உண்டபொழுது உளதாம் சோர்வினை அவன் சோர்வால் அதுவும் இற்றென்று கருதான் போலும். (சோர்வு - மனமொழி மெய்கள் தன் வயத்த அல்லவாதல். கருதல் அளவையான் அதன் இழுக்கினை உய்த்துணரின் ஒழியும் என இதனால் அஃது ஒழிதற் காரணம் கூறப்பட்டது.)

அதிகாரம் 94. சூது

[ இனி , அக்கள்ளுண்டல் போல அறம் பொருள் இன்பங்கட்கு இடையீடாகிய சூதாடலும் பிணியுழத்தலும் கூறுவான் தொடங்கி, முதற்கண் சூதினது இயல்பு கூறுகின்றார்.]

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று.

931
வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான் வெல்லும் ஆற்றல் உடையனாயினும் சூதாடலை விரும்பாதொழிக; வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று - வென்று பொருளெய்துவார் உளரால் எனின், அவ் வென்ற பொருள் தானும் இரையான் மறைந்த தூண்டிலிரும்பினை இரை எனக் கருதி மீன் விழுங்கினாற் போலும்.