பக்கம் எண் :

370

(வேறல் ஒருதலையன்மையின் 'வென்றிடினும்' என்றும், கருமங்கள் பலவும் கெடுதலின், 'வேண்டற்க' என்றும் கூறினார். எய்தியபொருள் சூதாடுவார் நீங்காமைக்கு இட்டதோர் தளை என்பதூஉம், அதனால் பின் துயருழத்தலும் உவமையால் பெற்றாம்.)

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
932
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் - அத்தூண்டிற் பொன் போன்ற ஒன்றனை முன்பெற்று இன்னும் பெறுதும் என்னும் கருத்தால் நூற்றினை இழந்து வறியராம் சூதர்க்கும்; நன்று எய்தி வாழ்வது ஓராறு உண்டாங்கொல் - பொருளால் அறனும் இன்பமும் எய்தி வாழ்வதொரு நெறியுண்டாமோ? ஆகாது. (அவ்வாற்றால் பொருளிழந்தே வருதலான் அதனால் எய்தும் பயனும் அவர்க்கு இல்லை என்பதாம்.)

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

933
உருள் ஆயம் ஓவாது கூறின் - உருளும் கவற்றின்கண் பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்; பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும் - அரசன் ஈட்டிய பொருளும் அவன் பொருள் வருவாயும் அவனை விட்டுப்போய்ப் பகைவர் கண்ணே தங்கும். (கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல் ஏற்றியும், சூதாடலை அது கூறலாகிய காரணத்தின்மேலிட்டும் கூறினார். பொருளாயம் என்பது உம்மைத்தொகை. ஆயம் - வடமொழித் திரிசொல், காத்தற்கண்ணும் இயற்றற் கண்ணும் கருத்திலனாகலின் அவை இரண்டும் பகைவர்பாற் செல்லும் என்பதாம்.)

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன் றில்.

934
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் - தன்னை விழைந்தார்க்கு முன்இல்லாத துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ள புகழையும் கெடுக்கும் சூதுபோல்; வறுமை தருவது ஒன்று இல் - நல்குரவினைக் கொடுக்க வல்லது பிறிதொன்று இல்லை.