காலை கழகத்துப் புகின் - அறம் பொருள் இன்பங்கட்கு அடைத்த காலம் அரசனுக்குச் சூதாடு களத்தின்கண் கழியுமாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அக்கழிவு தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும். ('பழகிய' என்பது பண்புடனும் இயையும். தான் செய்து கொள்ளும் அறம் முதலியவேயன்றி முன்னோரைத் தொடங்கிவருகின்ற செல்வமும் முன்செய்த நல்வினையின் பயனாய பண்பும் இலவாம் என்பதாம்.) பொருள்கெடுத்துப் பொய்மேல் கொளீஇ அருள்கெடுத் தல்லல் உழப்பிக்கும் சூது. 938 சூது - சூது; பொருள் கெடுத்து - தன்னைப் பயின்றவன் பொருளைக் கெடுத்து; பொய்மேற்கொளீஇ - பொய்யை மேற்கொள்ளப் பண்ணி, அருள் கெடுத்து - மனத்து எழும் அருளைக் கெடுத்து, அல்லல் உழப்பிக்கும் - இவ்வாற்றான் அவனை இருமையினும் துன்பம் உறுவிக்கும். (இத்தொழில்கள் மூன்றற்கும் சூது வினைமுதலாகவும், தோல்வி, வெற்றி, செற்றம் என்பன முறையே கருவிகளாகவும் கொள்க. முன்னதனான் இம்மையினும் ஏனையவற்றான் மறுமையினும் ஆம். 'பொருள் கொடுத்து' என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு 'மேற்கொளீஇ' என்புழி, மேற்கோடலாகிய வினை முதல்வினை.)உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன் றைந்தும் அடையாவாம் ஆயம் கொளின். 939 ஆயம் கொளின் - அரசன் சூதினைத் தனக்கு வினோதத் தொழிலாக விரும்புமாயின்; ஒளி கல்வி செல்வம் ஊண் உடை என்று அடையாவாம் - அவனை ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்று இவ்வைந்தும் சாராவாம். (ஆயம்: ஆகுபெயர். இச்சிறப்புமுறை செய்யுள் நோக்கிப் பிறழ நின்றது. செல்வம் - அறுவகை உறுப்புக்கள். ஊண் உடை என்பனவற்றால் துப்புரவுகளெல்லாம் கொள்ளப்படும். காலமும் கருத்தும் பெறாமையின், இவை உளவாகா என்பதாம். இவை நான்கு பாட்டானும் சிறுமை பல செய்து அவற்றான் இருமையும் கெடுதல் கூறப்பட்டது.) |