பக்கம் எண் :

373
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர்.
940
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல் - சூதாடலான் இருமைப் பயன்களையும் இழக்குந்தோறும் அதன்மேற் காதல் செய்யும் சூதன் போல; துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர் - உடம்பான் மூவகைத் துன்பங்களையும் அனுபவிக்குந்தோறும் அதன்மேற் காதலை உடைத்து உயிர். (சூது - ஆகுபெயர். உயிரினது அறியாமை கூறுவார் போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்தாகலின், அதனை யாப்புறுத்தற் பொருட்டு உவமமாக்கிக் கூறினார். இதன் எதிர்மறை முகத்தால், சூதினை வெறுத்து ஒழிவானை யொக்கும் உடம்பினை வெறுத்தொழியும் உயிர் எனவும் கொள்க, இதனான் இஃது ஒழிதற்கு அருமையும், ஒழிந்தாரது பெருமையும் கூறப்பட்டன.)

அதிகாரம் 95. மருந்து

[ பழவினையானும் காரணங்களானும் மக்கட்கு வாதம் முதலிய பிணிகள் வரும் ; அவற்றுள் பழவினையான் வருவன அதன் கழிவின்கண் அல்லது தீராமையின் அவை ஒழித்து , ஏனைக்காரணங்களான் வருவனவற்றைத் தீர்க்கும் மருந்தின் திறம் கூறுகின்றார் . காரணங்களாவன உணவு செயல்களது ஒவ்வாமையாகலின் , பிணிகளும் காரணத்தான் வருவனவாயின.]

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

941
மிகினும் குறையினும் - உணவும் செயல்களும் ஒருவன் பகுதிக்கு ஒத்த அளவின் அன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும்; நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்றும் நோய் செய்யும் - ஆயுள்வேத முடையரால் வாதமுதலாக எண்ணப்பட்ட மூன்று நோயும் அவருக்குத் துன்பஞ் செய்யும் ('நூலோர் எண்ணிய' எனவே, அவர் அவ்வாற்றான் வகுத்த வாதப்பகுதி பித்தப்பகுதி ஐயப்பகுதி என்னும் பகுதிப்பாடும் பெற்றாம். அவற்றிற்கு உணவு ஒத்தலாவது சுவை வீரியங்களானும் அளவானும் பொருந்துதல். செயல்கள் ஒத்தலாவது மனமொழி மெய்களாற் செய்யும் தொழில்களை அவை வருந்துவதற்கு முன்னே ஒழிதல். இவை இரண்டும் இங்ஙனமின்றி மிகுதல் குறைதல் செய்யின். அவை தத்தம் நிலையின் நில்லாவாய் வருத்தும் என்பதாம்.