காரணம் இரண்டும் அவாய்நிலையான் வந்தன. முற்றுஉம்மை விகாரத்தால் தொக்கது. இதனால் யாக்கைகட்கு இயல்பாகிய நோய் மூவகைத்து என்பதூஉம், அவை துன்பஞ்செய்தற்காரணம் இருவகைத்து என்பதூஉம் கூறப்பட்டன. இன்பம் செய்தற்காரணம் முன்னர்க் கூறுப.) மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி உணின்.942 அருந்தியது அற்றது போற்றி உணின் - ஒருவன் முன்னுண்டது அற்றபடியைக் குறிகளால் தெளிய அறிந்து பின் உண்ணுமாயின்; யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம் - அவன் யாக்கைக்கு மருந்து என்று வேறு வேண்டாவாம். (குறிகளாவன - யாக்கை நொய்ம்மை, தேக்கின் தூய்மை, காரணங்கள் தொழிற்குரியவாதல், பசி மிகுதல் என இவை முதலாயின. பிணிகள் யாக்கையவாகலின், 'யாக்கைக்கு' என்றார். 'உணின்' என்பது அதன் அருமை தோன்ற நின்றது.)அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. 943 அற்றால் அளவறிந்து உண்க - முன்னுண்டது அற்றால் பின்னுண்பதனை அளவு அறிந்து அளவிற்றாக உண்க; உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது - இறப்பவும் பலவாய பிற யாக்கைகளிற் பிழைத்துப் பெறற்கு அரிய இம்மானுட யாக்கையைப் பெற்றான் அதனை நெடுங்காலம் கொண்டு செலுத்தும் நெறி அதுவாகலான். (இம்மை மறுமை வீடு பேறுகள் எய்தற்பாலது ஈது ஒன்றுமேயாகலின், 'உடம்பு பெற்றான்' என்றும் அது நெடிது நின்றுழி அவை பெருகச் செய்துகொள்ளலாம் ஆகலின், 'நெடிது உய்க்குமாறு' என்றும் கூறினார். 'பெற்றால்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. 944
|