பக்கம் எண் :

377
உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
949
கற்றான் - ஆயுள் வேதத்தினைக் கற்ற மருத்துவன்; உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கருதிச் செயல் - அவ்வுபாயத்தினைச் செய்யுங்கால், ஆதுரன் அளவினையும் அவன்கண் நிகழ்கின்ற நோயின் அளவினையும் தன்செயற்கு ஏற்ற காலத்தினையும் அந்நூல் நெறியால் நோக்கி, அவற்றோடு பொருந்தச் செய்க. (ஆதுரன் அளவு - பகுதி பருவம் வேதனை வலிகளின் அளவு. பிணி அளவு - சாத்தியம், அசாத்தியம், யாப்பியம் என்னும் சாதிவேறுபாடும், தொடக்க நடு ஈறு என்னும் அதன் பருவ வேறுபாடும், வன்மை மென்மைகளும் முதலாயின. காலம் - மேற்சொல்லியன. இம் மூன்றும் பிழையாமல் நூல் நெறியானும் உணர்வு மிகுதியானும் அறிந்து செய்க என்பார், 'கற்றான் கருதிச் செயல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவ்விழுக்குப் பட்டுழி மருத்துவன் தீர்க்குமாறு கூறப்பட்டது.)

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான்என்
றப்பால்நாற் கூற்றே மருந்து.

950
மருந்து - பிணிக்கு மருந்தாவது; உற்றவன்- அதனையுற்றவன்; தீர்ப்பான் - அதனைத் தீர்க்கும் மருத்துவன்; மருந்து - அவனுக்குக் கருவியாகிய மருந்து; உழைச் செல்வான் என்று அப்பால் நாற்கூற்று - அதனைப் பிழையாமல் இயற்றுவான் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது. (நான்கு என்னும் எண் வருகின்றமையின், அது நோக்கி 'அப்பால்' என்றொழிந்தார், 'நான்கு கூற்றது' என்பது விகாரமாயிற்று. அவற்றுள் உற்றவன் வகை நான்காவன பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை உணர்த்தல் வன்மை, மருந்துத் துன்பம் பொறுத்தல் என இவை. தீர்ப்பான் வகை நான்காவன: நோய் கண்டு அஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டு எய்திய கல்வியும் நுண்ணறிவும் உடைமை, பலகாலும் தீர்த்து வருதல், மனமொழி மெய்கள் தூயவாதல் என இவை. மருந்தின்வகை நான்காவன: பல பிணிகட்கும் ஏற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதல், பகுதியோடு பொருந்துதல் என இவை.