பக்கம் எண் :

38

சான்றோன் எனக் கேட்ட தாய் - தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய். (கவானின் கண்கண்ட பொது உவகையினும் சால்புடையான் எனக்கேட்ட சிறப்பு உவகை பெரிதாகலின், 'பெரிது உவக்கும்' எனவும், 'பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய்' எனவும் கூறினார். அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது. சான்றோன் என்றற்கு உரியர் அவர் ஆகலின். தாய் உவகைக்கு அளவு இன்மையின் அஃது இதனான் பிரித்துக் கூறப்பட்டது.)

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.

70

தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி - கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது; இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் - தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல். ('சொல்' லென்பது நிகழ்த்துதலாகிய தன் காரணந்தோன்ற நின்றது.நிகழ்த்துதல் - அங்ஙனஞ் சொல்ல வொழுகல்.இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது)

அதிகாரம் 8. அன்புடைமை

(அஃதாவது, அவ் வாழ்க்கைத்துணையும் புதல்வரும் முதலிய தொடர்புடையார்கண் காதலுடையன் ஆதல்.அதிகார முறைமையும் இதனானே விளங்கும். இல்லறம் இனிது நடத்தலும், பிற உயிர்கள்மேல் அருள்பிறத்தலும் அன்பின் பயன் ஆகலின் , இது வேண்டப்பட்டது. வாழ்க்கைத்துணை மேல் அன்பு இல்வழி இல்லறம் இனிது நடவாமை 'அறவோர்க்கு அளித்தலும் , அந்தணர் ஓம்பலும், துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை' (சிலப்.16,71-73) என்பதனானும்,அதனான் 'அருள்பிறத்தல் அருள் என்னும் அன்பு ஈன் குழவி' (குறள்.757) என்பதனாலும் அறிக.)

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

71