நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்.958 நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் - குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரம் இன்மை உளதாமாயின்; அவனைக் குலத்தின்கண் ஐயப்படும் - அவனை அக்குலப்பிறப்பின் கண்ணே ஐயப்படும் உலகம். (நலமும் குலமும், ஆகுபெயர். நாரின்மையால் கொடாமையும் கடுஞ்சொல்லும் முதலிய கூறப்பட்டன. 'தோன்றின்' என்பது தோன்றாமை விளக்கி நின்றது. நலனுடையனாய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. உலகம் என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயப்படல் என்பது பாடமாயின், ஐயப்படுக என விதியாக்கி உரைக்க. இவை இரண்டு பாட்டானும் வேறுபட்ட வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். 959 நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் - நிலத்தினியல்பை அதன் கண் முளைத்த முளை காட்டும்; குலத்திற்பிறந்தார் வாய்ச் சொல் காட்டும் - அதுபோலக் குலத்தின் இயல்பை அதன் கண் பிறந்தார் வாயிற் சொல் காட்டும். (கிடந்தமை உள்ளபடி முளைத்தமாத்திரத்தானே நன்மையும் தீமையும் தெரிதலின், இலை முதலிய கூறாராயினார். ஆகவே, பொருளினும் செயல் முதலியன வேண்டாவாயின. குலத்து இயல்பு அறிதற்கருவி கூறுவார் போன்று, இன்சொல் வேண்டுமென்றவாறாயிற்று.)நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு. 960 நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் - ஒருவன் தனக்கு நலனுடைமையை வேண்டுவானாயின், தான் நாணுடையன் ஆதலை வேண்டுக; குலம் வேண்டின் யாரக்கும் பணிவு வேண்டுக - குலனுடைமையை வேண்டுவானாயின், பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதலை வேண்டுக. (நலம் - புகழ் புண்ணியங்கள். 'வேண்டும்' என்பது. விதிப் பொருட்டாய் நின்றது. 'வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்' (தொல்.சொல்.கிளவி.33) என்புழிப்போல,
|