'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தை தாய் என்றிவர்' எல்லாரும் அடங்க 'யாரக்கும்' என்றார். பணிவு - இருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.) அதிகாரம் 97. மானம்[இனி , குடிப்பிறந்தார்க்கு உரியவாய குணங்கள் கூறுவான் தொடங்கி , முதற்கண் மானம் கூறுகின்றார் . அஃதாவது , எஞ்ஞான்றும் தம் நிலையில் தாழாமையும் , தெய்வத்தால் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையும் ஆம் . இஃது அக்குடிப் பிறப்பினை நிறுத்துதலுடைமையின் , அச்சிறப்புப் பற்றி முன் வைக்கப்பட்டது.]
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். 961 இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் - செய்யாத வழித்தாம் அமையாத சிறப்பினை உடையவேயெனினும்; குன்ற வருப விடல் - தம் குடிப்பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக. (அமையாமை - இறத்தல். 'குடிப்பிறப்பு' என்பது அதிகார முறைமையான் வந்தது. 'இறப்பவரும் வழி இளிவந்தன செய்தாயினும் உய்க' என்னும் வடநுல் முறையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க என்பதாம்.)சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். 962 சீரினும் சீர் அல்ல செய்யார் - புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்; சீரொடு பேராண்மை வேண்டுபவர் - புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார். (எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல் பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது. நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார் என்பதாம்.)
|