பக்கம் எண் :

385

(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண் பின்னும் போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம். உவமை அவர்க்கு அஃது இயல்பு என்பது விளக்கி நின்றது.)

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு.
970
இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி - தமக்கு இழிவு வந்துழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ் வடிவினை; தொழுது ஏத்தும் உலகு - எஞ்ஞான்றும் தொழுது துதியாநிற்பர் உலகத்தார். ('புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வானவூர்தி - எய்துவர,'(புறநா.27) ஆகலின், துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று. இவை நான்கு பாட்டானும் மானப் பொருட்டாய இறப்பினது சிறப்புக் கூறப்பட்டது.)

அதிகாரம் 98. பெருமை

[ அஃதாவது , செயற்கு அரிய செய்தல் , தருக்கு இன்மை , பிறர் குற்றம் கூறாமை என்றிவை முதலிய நற்குணங்களாற் பெரியாரது தன்மை . நிலையினும் மேன்மேல் உயர்த்தல் பயத்தவாய இவை உளவாவது நிலையின் தாழாமை உள்வழியாகலின் , இது மானத்தின்பின் வைக்கப்பட்டது .]

ஒளிஒருவற் குள்ள வெறுக்கை இளிஒருவற்
கஃதிறந்து வாழ்தும் எனல்.

971
ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனுக்கு ஒளியாவது பிறராற் செயற்கரிய செய்வேம் என்று கருதும் ஊக்கமிகுதி; ஒருவற்கு இளி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர் வாழக்கடவேம் என்று கருதுதல். (ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை. 'ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்யான்' (நாலடி.செல்வம் நிலையாமை. 9) என்றார் பிறரும்,