ஒருமை மகளிரே போல - கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத்தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போல; பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு - பெருமைக்குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக்கொண்டு ஒழுகுவானாயின் அவன்கண் உண்டாம். (பொருளின் தொழில், உவமையினும் வந்தது. கற்புண்டாதல் தோன்ற நின்றமையின், உம்மை எச்ச உம்மை. ஒழுகுதல் - மனம் மொழி மெய்களை ஒடுக்கி, ஒப்புரவு முதலிய செய்து போதல். இதனால், அஃது உளதாமாறு கூறப்பட்டது.) பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல். 975 பெருமை உடையவர் - அவ்வாற்றால் பெருமையுடையராயினார்; அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் - தாம் வறியராய வழியும் பிறரால் செய்தற்கு அரியவாய தம் செயல்களை விடாது அவை செய்யும் நெறியால் கடைபோகச் செய்தலை வல்லராவர். ('வறியராய வழியும்' என்பது முன் செய்து போந்தமை தோன்றப் 'பெருமை உடையவர்' என்றதனானும், 'ஆற்றுவார்' என்றதனானும் பெற்றாம். இதனால் அதனை உடையார் செய்தி கூறப்பட்டது.)சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு. 976 பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - அப்பெற்றியராய பெரியாரை வழிபட்டு அவர் இயல்பினை யாம் கோடும் என்னும் கருத்து; சிறியார் உணர்ச்சியுள் இல்லை - மற்றைச் சிறியராயினார் மனத்தின்கண் உளதாகாது. (குடிமை, செல்வம், கல்வி என்று இவற்றது உண்மை மாத்திரத்தால் தம்மை வியந்திருப்பார்க்கு, அவை தமக்கு இயல்பு என்று அமைந்திருப்பாரை வழிபட்டு, அஃது உடையராதல் கூடாது என்பதாம்.)இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்பும்தான் சீரல் லவர்கண் படின். 977 சிறப்பும் தான் - தனக்கு ஒக்கும் பெரியாரிடத்து அமைந்திருத்தலைச் செய்வதாய சிறப்புத்தானும்; சீர் அல்லவர்கண்படின் - தனக்கு ஒவ்வாத சிறியாரிடத்துப் படுமாயின்; இறப்பே புரிந்த தொழிற்றாம் - அதனை ஒழிந்து தருக்கின் கண்ணே மிக்க செயலை உடைத்தாம்.
|