(தருக்கினை மிகச்செய்யும் என்பதாயிற்று. சிறப்பு - குடிமை, செல்வம், கல்விகளினாய மிகுதி. இவை இரண்டு பாட்டானும் அஃதிலார் செய்தி கூறப்பட்டது.) பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.978 பெருமை என்றும் பணியும் - பெருமையுடையார் அச்சிறப்பு உண்டாய ஞான்றும் தருக்கின்றி அமைந்தொழுகுவர்; சிறுமை (என்றும்) தன்னை வியந்து அணியும் - மற்றைச் சிறுமையுடையார் அஃதில்லாத ஞான்றும் தம்மை வியந்து புனையா நிற்பர். (பொருளின் தொழில்கள் பண்பின்மேல் ஏற்றப்பட்டன. இஃது 'அற்றம் மறைக்கும் பெருமை'(குறள் 980) என்புழியும் ஒக்கும். 'என்றும்' என்பது பின்னும் வந்து இயைந்தது. ஆம் என்பன இரண்டும் அசை. புனைதல் - பிறரின் தமக்கு ஓர் மிகுதியை ஏற்றுக்கோடல். இதற்கு, 'உயர்ந்தார் தாழ்வார்; தாழ்ந்தார் உயர்வார், இஃதொரு விரோதம் இருந்தவாறு என்?' என உலகியலை வியந்து கூறிற்று ஆக்குவாரும் உளர்.)பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். 979 பெருமை பெருமிதம் இன்மை - பெருமைக்குணமாவது காரணமுண்டாய வழியும் அஃது இயல்பாதல் நோக்கித் தருக்கின்றியிருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடல் - சிறுமைக் குணமாவது அஃது இல்வழியும் அதனை ஏற்றுக்கொண்டு தருக்கின் முடிவின்கண்ணே நின்றுவிடுதல். ('அளவறத் தருக்குதல்' என்பதாயிற்று. 'விடும்' என்று பாடம் ஓதுவாரும் உளர், முற்றுத்தொடரும் எழுவாய்த் தொடரும் தம்முள் இயையாமையின், அது பாடமன்மை உணர்க.)அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். 980
|