அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ - அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ?; ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் -தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்நின்ற அன்பினை எல்லாரும் அறியத்தூற்றும் ஆதலான். (உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை. கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு எய்தாதாயினும் அனுமான அளவையான் வெளிப்படும் என்பதாம். இதனால் அன்பினது உண்மை கூறப்பட்டது.) அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 72 அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்; அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர் - அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர். (ஆன் உருபுகளும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. 'என்பு' ஆகு பெயர். என்பும் உரியராதல் 'தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்' (புறநா.43) முதலாயினார் கண்காண்க.) அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு.73 ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப - அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர். (பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; வழக்கு: ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.) அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு.74
|