எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு.991 யார் மாட்டும் எண்பதத்தால் - யாவர் மாட்டும் எளிய செவ்வியராதலால்; பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப - அரிதாய பண்புடைமை என்னும் நன்னெறியினை எய்துதல் எளிது என்று சொல்லுவர் நூலோர். (குணங்களால் நிறைந்து செவ்வி எளியரும் ஆயக்கால் பண்புடைமை தானே உளதாம் ஆகலின், 'எண்பதத்தால் எய்தல் எளிது' என்றும், அஃது உலகத்தையெல்லாம் வசீகரித்தற் பயத்ததாகலின், அதனைத் தொல்லோர் சென்ற நன்னெறி யாக்கியும், அதனை எளிதின் எய்துதற்கு இது நூலோர் ஓதிய உபாயம் என்பார், அவர் மேல் வைத்தும் கூறினார்.)அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு. 992 அன்பு உடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் - பிறர் மேல் அன்பு உடையனாதலும் உலகத்தோடு அமைந்த குடியின்கண் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும்; பண்பு உடைமை என்னும் வழக்கு - ஒருவனுக்குப் பண்பு உடைமை என்று உலகத்தார் சொல்லும் நன்னெறி. (அமைதல் - ஒத்து வருதல். 'குடிப்பிறத்தல்' என்றது பிறந்தார் செயலை. தனித்த வழி ஆகாது இரண்டும் கூடிய வழியே ஆவதென்பது தோன்ற, முற்றும்மை கொடுத்தார். காரணங்கள் காரியமாக உபசரிக்கப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் பண்பு உடையார் ஆதற் காரணம் கூறப்பட்டது.)உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. 993 உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்று - செறியத்தகாத உடம்பால் ஒத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு ஒப்பாகாமையின் அது பொருந்துவதன்று; ஒப்பதாம் ஒப்பு வெறுத்தக்க பண்பு ஒத்தல் - இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பால் ஒத்தல்.
|