பக்கம் எண் :

396
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
1000
பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம் - பண்பில்லாதவன் முன்னை நல்வினையான் எய்திய பெரிய செல்வம், அக்குற்றத்தால் ஒருவற்கும் பயன்படாது கெடுதல்; நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று - நல்ல ஆன் பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன் சுவைத்தாகாது கெட்டாற் போலும். ('கலத்தீமை' என்பது மெலிந்து நின்றது. தொழிலுவம மாகலின் பொருளின்கண் ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. படைக்கும் ஆற்றல் இலனாதல் தோன்ற 'பெற்ற' என்றும், எல்லாப் பயனும் கொள்ளற்கு ஏற்ற இடனுடைமை தோன்ற, 'பெருஞ்செல்வம்' என்றும் கூறினார். அச்செல்வமும் பயன்படாது என்ற இதனான் வருகின்ற அதிகாரப் பொருண்மையும் தோற்றுவாய் செய்யப்பட்டது. இவை நான்கு பாட்டானும் அஃது இல்லாரது இழிவு கூறப்பட்டது.)

அதிகாரம் 101. நன்றியில் செல்வம்

[ அஃதாவது , ஈட்டியாற்கும் பிறர்க்கும் பயன்படுதல் இல்லாத செல்வத்தினது இயல்பு . உடையானது குற்றம் செல்வத்தின் மேல் ஏற்றப்பட்டது . அதிகார முறைமை மேல் தோற்றுவாய் செய்த அதனால் பெற்றாம்.]

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்.

1001
வாய்சான்ற பெரும்பொருள் வைத்தான் அஃது உண்ணான் - தன் மனை அகலமெல்லாம் நிறைதற்கு ஏதுவாய பெரும் பொருளை ஈட்டி வைத்து உலோபத்தால் அதனை உண்ணாதவன்; செத்தான் செயக்கிடந்தது இல் - உளனாயினும் செத்தானாம், அதன்கண் அவனால் செயக்கிடந்ததோர் உரிமை இன்மையான். ('வைத்தான்' என்பது முற்றெச்சம், உண்ணுதல்: அதனான் ஐம்புலன்களையும் நுகர்தல்.