(ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின்,அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லைஎன்பார், 'என் எண்ணுங்கொல்லோ' என்றார். ஓகாரம் - அசை. இவைமூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.) கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய கோடிஉண் டாயினும் இல்.1005 கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையரல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல் - பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை. (இன்பத்தினும் அறம் சிறந்தமையின்,கொடுத்தல் தொழில் முற்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்றது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின், 'இல்' என்றார்.)ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன் றீதல் இயல்பிலா தான். 1006 தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான் - தான் நுகரானாய் அதன்மேலும் தகுதியுடையார்க்கு அவர் வேண்டிய தொன்றனை ஈதலியற்கை இலனாயின்; பெருஞ்செல்வம் ஏதம் - இரண்டும் செய்தற்கு இடனுடைத்தாய செல்வத்திற்கு ஒரு நோய். (தகுதி - தானம் கோடற்கு ஏற்புடைமை. ஏதம் - ஆகுபெயர், நுகரப்படுதலும் ஈயப்படுதலுமாகிய தொழிற்கு உரியதனை அன்றாக்கினமையின், 'நோய்' என்றார். 'ஈதல் இயல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு ஈட்டல் காத்தல் முதலியவற்றால் துன்பமேயாம்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன் கூறப்பட்டன.)அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று. 1007 அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் - ஒரு பொருளும் இலராயினார்க்கு அவர் வேண்டியதொன்றனைக் கொடாதானது செல்வம் கொன்னே கழிதல்; மிகநலம் பெற்றாள்தமியள் மூத்தற்று - பெண்டிரின் மிக்க நலத்தினைப் பெற்றாளொருத்தி கொடுப்பாரின்மையின் கொழுநன் இன்றித் தமியளாய் மூத்த தன்மைத்து.
|