(நலம் - வடிவின் நன்மையும் குணத்தின் நன்மையும். இரண்டும் ஒருங்கு பெறுதல் அரிதாகலின், 'பெற்றாள்' என்றார். கொடுப்பாரும் கொழுநனுமேயன்றித் தானும் பயன் இழந்து கழிந்த குமரியோடு உவமை கூறினமையின், தானும் ஏற்பானுமேயன்றிச் செல்வமும் பயனிழந்து கழியும் என்பதாயிற்று.) நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.1008 நச்சப்படாதவன் செல்வம் - வறியார்க்கு அணியனாயிருந்தும் ஒன்றுங்கொடாமையின் அவரான் நச்சப்படாதவன் செல்வமெய்துதல்; ஊர் நடுவுள் நச்சுமரம் பழுத்தற்று - ஊரிடை நிற்பதோர் நச்சு மரம் பழுத்தாற் போலும். ('நடுவூர்' என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. அண்மை உடைமைகளான் பயனில்லை என்பதாம்.)அன்புஒரீஇத் தற்செற் றறம்நோக்கா தீட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர். 1009 அன்பு ஒரீஇ - ஒருவன் கொடாமைப் பொருட்டுச் சுற்றத்தார் நட்டார்கண் அன்பு செய்தலையொழிந்து; தன் செற்று- வேண்டுவன நுகராது தன்னைச் செறுத்து; அறம் நோக்காது - வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தை நினைப்பதும் செய்யாது; ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் - ஈட்டிய ஒள்ளிய பொருளைக் கொண்டுபோய்ப் பயன்பெறுவார் பிறர். (பயனாய அறனும் இன்பமும் செய்து கொள்ளாதானுக்குப் பொருளால் உள்ளது ஈட்டல் துன்பமே என்பது தோன்ற 'ஈட்டிய' என்றும், அவன் வழியினுள்ளார்க்கும் உதவாது என்பது தோன்றப் 'பிறர்' என்றும் கூறினார்.)சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து. 1010 சீர் உடைச் செல்வர் சிறுதுனி - புகழுடைத்தாய செல்வத்தினையுடையவரது நிற்கும் காலம் சிறிதாய வறுமை; மாரி வறங்கூர்ந்தனையது உடைத்து - உலகத்தையெல்லாம் நிலை நிறுத்தும் மேகம் வறுமை மிக்காற் போல்வதோர் இயல்பினையுடைத்து.
|