ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாண்உடைமை மாந்தர் சிறப்பு.1012 ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - ஊணும் உடையும் அவை யொழிந்தனவும் மக்களுயிர்க்கெல்லாம் பொது; மாந்தர் சிறப்பு நாண் உடைமை - நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே, அவையல்ல. (ஒழிந்தன - உறக்கமும் அச்சமும் காமமும். சிறப்பு - அவ்வுயிர்களின் வேறுபாடு. 'அச்சம்' என்று பாடமோதுவாரும் உளர்.)ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு. 1013 உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா: சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது - அது போலச் சால்பு என்னும் நன்மைக் குணத்தைத் தனக்கு நிலைகளனாகக் கொண்டு, அதனை விடாது. ('உடம்பு' என்பது சாதியொருமை. நன்மை - ஆகுபெயர். உயிர் உடம்போடு கூடியல்லது பயனெய்தாதவாறு போலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். 'ஊணைக் குறித்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்.அணிஅன்றோ நாண்உடைமை சான்றோர்க் கஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை. 1014 சான்றோர்க்கு நாண் உடைமை அணியன்றோ - சான்றோர்க்கு நாண் உடைமை ஆபரணமாம்; அஃது இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வாபரணம் இல்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம். (அழகு செய்தலின் 'அணி' என்றும், பொறுத்தற்கு அருமையின் 'பிணி' என்றும் கூறினார். ஓகார இடைச்சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை மூன்று பாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.)பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக் குறைபதி என்னும் உலகு. 1015 பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் - பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணுக்கு உறைவிடம் என்று சொல்லுவர்.
|