பக்கம் எண் :

409

'ஊன்று சால்மருங்கி்ன் ஈன்றதன் பயனே' (புறநா.35)என்றதனால், தம் அரசனுக்குக் கொற்றம் பெருக்கி மண்முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம், 'இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்' (சிலப்.நாடுகாண்.149)என்றார் பிறரும்.)

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
1035
கைசெய்து ஊண் மாலையவர் இரவார் - தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார் பிறரைத் தாம் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர் - தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கரவாது கொடுப்பர். ('செய்து' என்பதற்கு 'உழுதலை' என வருவிக்க. 'கைசெய் தூண் மாலையவர்' என்பது, ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.)

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

1036
உழவினார் கை மடங்கின் - உழுதலையுடையார் கை அதனைச் செய்யாது மடங்குமாயின்; விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கு நிலை இல்லை - யாவரும் விழையும் உணவும் யாம் துறந்தேம் என்பார்க்கு அவ்வறத்தின்கண் நிற்றலும் உளவாகா. (உம்மை, இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மையான் தாம் உண்டலும் இல்லறஞ்செய்தலும் யாவர்க்கும் இல்லையாயின. அவர் உறுப்புமாத்திரமாய கை வாளாவிருப்பின், உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். 'ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தேம் என்பார்க்கு' என உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அதைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.)

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் - ஒரு நிலத்தினை உழுதவன் ஒரு பலப் புழுதி கஃசாம் வண்ணம் அதனைக் காய விடுவானாயின்; பிடித்து எருவும் வேண்டாது சாலப்படும் - அதன்கண் செய்த பயிர் ஒரு பிடியின்கண் அடங்கிய எருவும் இடவேண்டாமல் பணைத்து விளையும்.