பக்கம் எண் :

414

(அவ்வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள்.1045)துன்பங்கள், நெருநல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.)

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது.
1049
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை. ('நெருப்பினும் நிரப்புக் கொடிது', என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.)

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

1050
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்; உப்பிற்கும் காடிக்கும் கூற்று - பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம். (மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப் பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி 'முற்றத்துறத்தலாவது துப்புரவில்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.)

அதிகாரம் 106. இரவு

[ இனி , ' மானந் தீரா இரவு இரவாமையோடு ஒத்தலின் அதனானும் வீடெய்தற்பயத்ததாய உடம்பு ஓம்பப்படும் ,' என்னும் அறநூல் வழக்குப்பற்றி , மேல் எய்திய துவரத் துறத்தல் விலக்குதற் பொருட்டு ' இரவு ' கூறுகின்றார் . அதிகார முறைமையும் இதனானே விளங்கும் .]