| இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று.
 1051இரத்தக்கார்க் காணின் இரக்க - நல்கூர்ந்தார் இரத்தற்கு ஏற்புடையாரைக் காணின், அவர்மாட்டு இரக்க; கரப்பின் அவர் பழி தம் பழி அன்று - இரந்தால் அவர் கரந்தாராயின் அவர்க்குப் பழியாவதல்லது தமக்குப் பழியாகாமையான். ('இரவு' என்னும் முதனிலைத் தொழிற்பெயரது இறுதிக்கண் நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இரத்தற்கு ஏற்புடையராவார் உரையாமை முன் உணரும் ஒண்மையுடையராய் மாற்றாது ஈவார். அவர் உலகத்து அரியராகலின், 'காணின்' என்றும், அவர் மாட்டு இரந்தார்க்கு இரவான் வரும் இழிபு இன்மையின், 'இரக்க' என்றும், அவர் ஈதலின் குறை காட்டாமையின் 'கரப்பின்' என்றும், காட்டுவராயின் அப்பழி தூவெள்ளறுவைக்கண் மாசுபோல, அவர்கண் கடிது சேறலின் 'அவர்பழி' என்றும்,ஏற்பிலார் மாட்டு இரவன்மையின் 'தம் பழியன்று' என்றும் கூறினார்.) இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவைதுன்பம் உறாஅ வரின்.
 1052ஒருவற் கிரத்தல் இன்பம் - ஒருவற்கு இரத்தல்தானும் இன்பத்திற்கு ஏதுவாம்; இரந்தவை துன்பம் உறாஅவரின் - இரந்த பொருள்கள் ஈவாரது உணர்வு உடைமையால் தான் துன்புறாமல் வருமாயின். (இன்பம் - ஆகுபெயர். 'உறாமல்' என்பது கடைக்குறைந்து நின்றது. துன்பம் - சாதியொருமைப் பெயர். அவையாவன, ஈவார்கண் காலமும் இடனும் அறிந்து சேறலும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம் வயத்தராக்கலும், அவர் மனம் நெகிழ்வன நாடிச் சொல்லலும் முதலியவற்றான் வருவனவும், மறுத்துழி வருவனவும் ஆம். அவையுறாமல் வருதலாவது, அவர் முன்னுணர்ந்து ஈயக்கோடல். 'இரந்தவர் துன்பமுறாவரின்' என்று பாடம் ஓதி, 'இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றால் துன்புறாது எதிர்வந்து ஈவராயின்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் நல்குரவான் உயிர் நீங்கும் எல்லைக்கண் இளிவில்லா இரவு விலக்கப்படாது என்பது கூறப்பட்டது.) |