பக்கம் எண் :

417
கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் - உள்ளது கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் - மானம்விடாது இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக் கெடும். ('கரத்தல்', ஒருவற்கு வேண்டுவதொன்றன்மையின், அதனை 'நோய்' என்றும், அஃது இல்லாத இரக்கத்தக்காரைக் கண்டபொழுதே அவர் கழியுவகையராவர் ஆகலின், 'எல்லாம் ஒருங்கு கெடும்' என்றும் கூறினார். இடும்பை - ஆகுபெயர். 'முழுதும் கெடும்' என்று பாடம் ஓதி 'எஞ்சாமற் கெடும்' என்று உரைப்பாரும் உளர்.)

இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து.

1057
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் - தம்மை அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து - அவ்விரப்பாரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுள்ளே உவக்கும் தன்மையுடைத்து. (இகழ்ந்து எள்ளாது எனவே, நன்கு மதித்தலும் இனியவை கூறலும் பெறுதும். நிரப்பு இடும்பை கெடுதலளவேயன்றி, ஐம்புலன்களானும் பேரின்பம் எய்தினாராகக் கருதலான், 'உள்ளுள் உவப்பது உடைத்து' என்றார். இவை ஐந்து பாட்டானும் அவ்விரக்கத்தக்காரது இயல்பு கூறப்பட்டது.)

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.

1058
இரப்பார் இல்லாயின் - வறுமையுற்று இரப்பார் இல்லையாயின்; ஈர்ங்கண்மா ஞாலம் - குளிர்ந்த இடத்தையுடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள்; மரப்பாவை சென்று வந்தற்று - உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற்போலும். (ஐகாரம், அசைநிலை. ஞாலம் என்னும் ஆகுபெயர்ப் பொருட்கு உவமையோடு ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. ஞாலத்துள்ளார் என்றது அவரை ஒழிந்தாரை. அவர்க்கு ஈதலைச் செய்து புகழும் புண்ணியமும் எய்தாமையின், உயிருடையரல்லார் என்பதாம், 'ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து, வாழ்வாரே வன் கணவர்', என்றார் பிறரும்: இத்தொடையின்பம் நோக்காது 'இரப்பவர் இல்லாயின்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)