ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை.1059 இரந்துகோள் மேவார் இலாஅக் கடை - அவர்பாற்சென்று ஒன்றனை இரந்துகோடலை விரும்புவார் இல்வழி; ஈவார்கண் தோற்றம் என் உண்டாம் - கொடுப்பார் மாட்டு என்ன புகழுண்டாம்? யாதுமில்லை. (தோற்றம் - ஆகுபெயர். மேவுவார் என்பது விகாரமாயிற்று. கொடுத்தல் வண்மை வெளிப்படாமையின் அதனால் புகழெய்தார் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் உலகிற்கு இரப்பார் வேண்டும் என்பது கூறப்பட்டது.)இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி. 1060 இரப்பான் வெகுளாமை வேண்டும் - ஈவானுக்குப் பொருள் உதவாவழி இவன் எனக்கு ஈகின்றிலன் என்று அவனை இரப்பான் வெகுளாதொழிதல் வேண்டும்; நிரப்பு இடும்பை தானேயும் கரிசாலும் - அது வேண்டிய பொழுது உதவாது என்பதற்கு வேறு சான்று வேண்டா, நிரப்பாகிய தன் இடும்பை தானேயும் சான்றாதல் அமையும். (யாவர்க்கும் தேடவேண்டுதலும் நிலையின்மையும் முதலிய பிற சான்றும் உண்டு என்பதுபட நின்றமையின், உம்மை எச்ச உம்மை. தனக்கேயன்றி மற்றை யிரந்தார்க்கும் அற்றைக்கன்று பொருள் கடைக்கூட்டற்கு அவனுறும் துன்பத்தைத் தனக்கேயாக வைத்துத் தானுறுந் துன்பம் தான் அறிந்து வெகுளற்க என்பதாம். இதனான் அவர்க்கு இன்றியமையாததோர் இயல்பு கூறப்பட்டது.) அதிகாரம் 107. இரவு அச்சம்[ அஃதாவது , மானம் தீர வரும் இரவிற்கு அஞ்சுதல் . அதிகார முறைமையும் இதனானே விளங்கும் .]
|