பக்கம் எண் :

420
இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.
1064
இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு - நுகரவேண்டுவன இன்றி நல்கூர்ந்தவழியும் பிறர்பாற் சென்று இரத்தலை உடம்படாத அமைதி; இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே - எல்லாவுலகும் ஒருங்கு இயைந்தாலும் கொள்ளாத பெருமையுடைத்து. (அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகலின், இரவு ஒல்லாமை அதன்மேல் ஏற்றப்பட்டது. இதனான் அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யார் என்பது கூறப்பட்டது.)

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த
துண்ணலின் ஊங்கினிய தில்.

1065
தாள் தந்தது தெண்ணீர் அடுபுற்கையாயினும் - நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர் போலும் அடுபுற்கையே யாயினும், உண்ணலின் ஊங்கு இனியது இல் - அதனையுண்டற்கு மேல் இனியது இல்லை. (தாள் தந்த கூழ் செறிவின்றித் தெண்ணீர் போன்றதாயினும்; இழிவாய இரவான் வந்ததன்றித் தம் உடைமையாகலின், அமிழ்தத்தோடு ஒக்கும் என்பதாம். இதனான் நெறியினானாயது சிறிதேனும், அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.)

ஆவிற்கு நீர்என் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்.

1066
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் - தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு, அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்; இரவின் நாவிற்கு 'இளிவந்தது இல்' - அவ்விரவுபோல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை. (ஆகாத்தோம்பல் பேரறமாகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ள வேண்டாத எண்மைத்தாகலின் 'நீர்' என்றும், இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல் அளவே ஆதலின் 'நாவிற்கு' என்றும்,