பக்கம் எண் :

428

அதிகாரம் 109. தகை அணங்கு உறுத்தல்

[ அஃதாவது , பொழில் விளையாட்டு விருப்பான் ஆயம் நீங்க , அதன்கண் தமியளாய் நின்றாளை , வேட்ட விருப்பான் இளையார் நீங்கத் தமியனாய் வந்து கண்ணுற்ற தலைமகன் , அவள் வனப்புத் தன்னை வருத்தம் உறுவித்தலைச் சொல்லுதல் . இது , கண்ணுற்ற பொழுதே நிகழ்வதாகலின் , முதற்கண் கூறப்பட்டது .]

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
1081
(தலைமகள் உருவு முதலியன முன் கண்டறிவன அன்றிச் சிறந்தமையின் அவளைத் தலைமகன் ஐயுற்றது.) கனங்குழை - இக்கனவிய குழையை உடையாள்; அணங்கு கொல் - இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? ஆய்மயில் கொல் - அன்றி ஒரு மயில் விசேடமோ? மாதர்கொல் - அன்றி ஒருமானுட மாதரோ; என் நெஞ்சு மாலும் - இவளை இன்னள் என்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது. (ஓ - அசை. ஆய் மயில்: படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில்: மயிற் சாதியுள் தெரிந்தெடுத்த மயில் என்றும் ஆம். 'கனங்குழை': ஆகுபெயர். 'கணங்குழை' என்ற பாடம் ஓதி, 'பலவாய்த் திரண்ட குழை' என்று உரைப்பாரும் உளர். எழுதலாகா உருவும், தன் வருத்தமும் பற்றி 'அணங்குகொல்' என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி, 'ஆய்மயில்கொல்' என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி 'மாதர்கொல்' என்றும் கூறினார்.)

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

1082
(மானுட மாதராதல் தெளிந்த தலைமகன் அவள் நோக்கினானாய வருத்தம் கூறியது.) நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் - இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள் என் நோக்கிற்கு எதிர் நோக்குதல்; தாக்கு அணங்கு தானைக்கொண்டன்னது உடைத்து - தானே தாக்கி வருத்துவதோர் அணங்கு தாக்குதற்குத் தானையையும் கொண்டு வந்தாற் போலும் தன்மையை உடைத்து.