(மேலும், 'அணங்குகொல் ஆய்மயில் கொல்' என்றமையான், இகரச்சுட்டு வருவிக்கப்பட்டது. எதிர் நோக்குதல்என்றமையின், அது குறிப்பு நோக்காயிற்று. வனப்பால் வருந்துதல் மேலும் குறிப்பு நோக்கால் வருந்துதல் கூறியவாறு. 'நோக்கினாள்' என்பதற்கு 'என்னால் நோக்கப்பட்டாள்' என்று உரைப்பாரும் உளர்.) பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்தகையால் பேரமர்க் கட்டு.1083 (இதுவும் அது) கூற்று என்பதனைப் பண்டு அறியேன் - கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டு அறிவதல்லது கண்டறியேன்; இனி அறிந்தேன் - இப்பொழுது கண்டறிந்தேன்; பெண் தகையாள் பேர் அமர்க்கட்டு - அது பெண்தகையுடனே பெரியவாய் அமர்த்த கண்களை உடைத்து. (பெண்தகை: நாணம்,மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்கள். அவை அவ்வக்குறிகளான் அறியப்பட்டன. அமர்த்தல்: அமர் செய்தல், பெயரடியாய வினை. பெண்தகையால் இன்பம் பயத்தலும் உண்டேனும் துன்பம் பயத்தல் மிகுதிபற்றிக் கூற்றாக்கிக் கூறினான்.)கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப் பேதைக் கமர்த்தன கண். 1084 (இதுவும் அது) பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண் தகையை உடைய இப்பேதைக்கு உளவாய கண்கள்; கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்துடனே கூடி அமர்த்திருந்தன. (அமர்த்தல்: மாறுபடுதல். குணங்கட்கும் பேதைமைக்கும் ஏலாது கொடியவாயிருந்தன என்பதாம்.)கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து. 1085 (இதுவும் அது.) கூற்றமோ - என்னை வருத்துதல் உடைமையான் கூற்றமோ; கண்ணோ - என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ; பிணையோ - இயல்பாக வெருவுதலுடைமையான் பிணையோ? அறிகின்றிலேன்; மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து - இம் மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்தாயிரா நின்றது.
|