சாவா மருந்து எனினும் - உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும் ; விருந்து புறத்ததாத் தானுண்டல் - தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்; வேண்டற்பாற்று அன்று - விரும்புதல் முறைமையுடைத்து அன்று.(சாவா மருந்து : சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றியே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும் அதனை ஒழிக' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.) வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று.83 வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை - தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை. (நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.) அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந் தோம்புவான் இல். 84 செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண். (மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.) வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். 85 விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ - வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா. ('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று
|