(இன்பமும் துன்பமும் ஒருங்கு செய்யாநின்றது என்பதாம். தொழில்பற்றி வந்த ஐயநிலை உவமம்.) கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள் கண்.1086 (இதுவும் அது) கொடும் புருவம் கோடா மறைப்பின் - பிரியா நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பமுடையவாய் விலக்கினவாயின்; இவள் கண் நடுங்கு அஞர் செய்யல - அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்கு நடுங்கும் துயரைச் செய்யமாட்டா. (நட்டாரைக் கழறுவார்க்குத் தாம் செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும், செல்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலும் சிறிது இடைபெறின் அது வழியாக வந்து அஞர் செய்யுமாகலின் 'மறைப்பின்' என்றும் கூறினான். நடுங்கு அஞர் - நடுங்கற்கு ஏதுவாய அஞர். 'தாம் இயல்பாகக் கோடுதல் உடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கமாட்டா' வாயின என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.) கடாஅக் களிற்றின்மேல் கண்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில். 1087 (அவள் முலைகளினாய வருத்தம் கூறியது.) மாதர் படா முலை மேல் துகில் - இம் மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில்; கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் - அவை கொல்லாமல் காத்தலின் கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும். (கண்ணை மறைத்தல் பற்றிக் 'கட்படாம்' என்றான். துகிலான் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகிலூடே அவற்றின் வெம்மையும் பெருமையும் கண்டு இத்துணையாற்றலுடையன இனி எஞ்ஞான்றும் சாய்வில எனக் கருதிப் 'படாமுலை' என்றான். உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது.)
|