இவள் குறிப்பு ஆராய்ந்து அறியாமையின், 'யான் அதுபெற்றிலேன்' எனக் குறிப்பெச்சம் வருவித்துரைக்க. 'அரிமயிர்த் திரள் முன்கை'(புறநா.11)என்னும் புறப்பாட்டிற் குறிப்புப் போல.) அதிகாரம் 110. குறிப்பு அறிதல்[ அஃதாவது , தலைமகன் தலைமகள் குறிப்பினை அறிதலும் , தோழி குறிப்பினை அறிதலும், அவள்தான் அவ்விருவர் குறிப்பினையும் அறிதலுமாம் . தகை அணங்குற்ற தலைமகன் தலைமகளைக் கூடுங்கால் இது வேண்டுமாகலின் , தகை அணங்கு உறுத்தலின்பின் வைக்கப்பட்டது.]
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. 1091 (தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் குறிப்பினை அவள் நோக்கினான் அறிந்தது.) இவள் உண்கண் உள்ளது இரு நோக்கு - இவளுடைய உண்கண் அகத்தாய நோக்கு இது பொழுது என்மேல் இரண்டு நோக்காயிற்று; ஒரு நோக்கு நோய் நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒரு நோக்கு என்கண் நோய் செய்யும் நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு. (உண்கண்: மையுண்ட கண். நோய் செய்யும் நோக்கு அவள் மனத்தினாய நோக்குத் தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு. நோய் செய்யும் நோக்கினைப் பொதுநோக்கு என்பாரும் உளர்,அது நோய் செயின் கைக்கிளையாவதல்லது அகமாகாமை அறிக.அவ் வருத்தந்தீரும் வாயிலும் உண்டாயிற்று என்பதாம்.)கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது. 1092 (இதுவும் அது.) கண் களவு கொள்ளும் சிறுநோக்கம் - இவள் கண்கள் யான் காணாமல் என்மேல் நோக்குகின்ற அருகிய நோக்கம்; காமத்தின் செம்பாகம் அன்று பெரிது - மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதி அளவன்று; அதனினும் மிகும்.
|