பக்கம் எண் :

433

(தான் நோக்கியவழி நாணி இறைஞ்சியும்,நோக்காவழி உற்று நோக்கியும் வருதலான், 'களவுகொள்ளும்' என்றும், அஃது உளப்பாடுள்வழி நிகழ்வதாகலின், இனிப் 'புணர்தல் ஒருதலை'என்பான் 'செம்பாகம் அன்று, பெரிது' என்றும் கூறினான்.)

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்
1093
(நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது.) நோக்கினாள் - யான் நோக்கா அளவில் தான் என்னை அன்போடு நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள் -நோக்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினாள்; அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர் - அக்குறிப்பு இருவேமிடையும் தோன்றிய அன்புப்பயிர் வளர அதன்கண் அவள் வார்த்த நீராயிற்று. (அஃது என்னும் சுட்டுப்பெயர், அச்செய்கைக்கு ஏதுவாய குறிப்பின்மேல் நின்றது. யாப்பினான் ஆயதனை, 'யாப்பு' என்றார். ஏகதேச உருவகம்.)

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்

1094
(நாணினாலும் மகிழ்ச்சியினாலும் அறிந்தது.) யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் - யான் தன்னை நோக்குங்கால் தான் எதிர்நோக்காது இறைஞ்சி நிலத்தை நோக்காநிற்கும்; நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் - அஃது அறிந்து யான் நோக்காக்கால் தான் என்னை நோக்கித் தன்னுள்ளே மகிழா நிற்கும். (மெல்ல வெளிப்படாமல், மகிழ்ச்சியால் புணர்தற் குறிப்பு இனிது விளங்கும். 'மெல்ல நகும்' என்பதற்கு முறுவலிக்கும் என்று உரைப்பாரும் உளர்.)

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

1095
(இதுவும் அது.) குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - நேரே குறிக்கொண்டு நோக்காத் துணையல்ல; ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணைச் சிறங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழா நிற்கும்.