பக்கம் எண் :

435

அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - அதனால் நுடங்கியஇயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு . (ஏர்: ஆகுபெயர். 'அக்குறிப்பு இனிப் பழுதாகாது' என்பதாம்.)

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள.
1099
(தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது) ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் - முன்னறியாதார் போல ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல்; காதலார் கண்ணே உள - இக்காதலையுடையர் கண்ணே உளவாகாநின்றன. (பொது நோக்கு : யாவர் மாட்டும் ஒரு தன்மைத்தாய நோக்குதல் தொழில் ஒன்றேயாயினும், இருவர்கண்ணும் நிகழ்தலானும், ஒருவர்கண்தானும் குறிப்பு வேறுபாட்டால் பலவாம் ஆகலானும், 'உள' எனப் பன்மையாற் கூறப்பட்டது. இருவரும் 'மது மறைந்துண்டார் மகிழ்ச்சிபோல உள்ளத்துள்ளே மகிழ்தலின்' (இறையனார்-8) அதுபற்றிக் 'காதலார்' என்றும், அது புறத்து வெளிப்படாமையின் 'ஏதிலார் போல' என்றும் கூறினாள்.)

கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

1100
(இதுவும் அது) கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் - காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின்; வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - அவர் வாய்மை தோன்றச் சொல்லுகின்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடைய அல்ல. (நோக்கால் ஒத்தல்: காதல் நோக்கினவாதல். வாய்ச் சொற்கள்: மனத்தின்கண் இன்றி வாயளவில் தோன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன: அவள் புனங்காவல் மேலும், அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில் சொற்களாகலின்,இவை கொள்ளப்படா என்பதாம். இவை புணர்தல் நிமித்தம்.)