பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.) செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு. 86 செல் லிருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் - தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து - மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். ('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.) இனைத்துணைத் தென்பதொன் றில்லை: விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். 87 வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை - அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. (ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.) பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். 88 பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் - நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் - அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார். ("ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் (நாலடி.280) "ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.) உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. 89
|