பக்கம் எண் :

440

(களவொழுக்கத்திற் பல இடையீடுகளான் எய்தப்பெறாது அவாவுற்றான், இதுபொழுது நிரந்தரமாக எய்தப் பெற்றமையின், 'செறிதோறும்'என்றார். அறிவிற்கு எல்லை இன்மையான், மேன்மேல் அறியஅறிய முன்னையறிவு அறியாமையாய் முடியுமாறு போலச் செறிவிற்கு எல்லையின்றி, மேன்மேற் செறியச் செறிய முன்னைச் செறிவு செறியாமையாய் முடியாநின்றது எனத்தன் ஆராமை கூறியவாறு. இப்புணர்ச்சி மகிழ்தல் தலைமகட்கும் உண்டேனும் அவள்மாட்டுக் குறிப்பான் நிகழ்வதல்லது கூற்றான் நிகழாமை அறிக.)

அதிகாரம் 112. நலம் புனைந்து உரைத்தல்

[ அஃதாவது , தலைமகன் தலைமகள் நலத்தைப் புனைந்து சொல்லியது . இது , புணர்ச்சி மகிழ்ந்துழி நிகழ்வதாகலின் , புணர்ச்சி மகிழ்தலின் பின் வைக்கப்பட்டது .]

நல்நீரை வாழி அனிச்சமே நின்னினும்
மெல்நீரள் யாம்வீழ் பவள்.

1111
(இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) அனிச்சமே வாழி நன்னீரை - அனிச்சப்பூவே, வாழ்வாயாக, மென்மையால் நீ எல்லாப் பூவினும் நல்ல இயற்கையையுடையை; யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள் - அங்ஙனமாயினும் எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மெல்லிய இயற்கையை உடையவள். (அனிச்சம்: ஆகுபெயர், 'வாழி' என்பது உடன்பாட்டுக் குறிப்பு. இனி 'யானே மெல்லியள்' என்னும் தருக்கினை ஒழிவாயாக என்பதாம். அது பொழுது உற்றறிந்தானாகலின், ஊற்றின் இனி்மையையே பாராட்டினான், 'இன்னீரள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.

1112