(இதுவும் அது.) (அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது?) அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல - முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண் போல; மாதர் முகத்து மறு உண்டோ - இம்மாதர் முகத்து மறு உண்டோ? (இடம் - கலை, மதிக்கு என்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மை பற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.) மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி. 1118 (இதுவும் அது.) மதி வாழி - மதியே வாழ்வாயாக; மாதர் முகம் போல ஒளி விடவல்லையேல் காதலை - இம்மாதர்முகம் போல யான் மகிழும் வகை ஒளிவீச வல்லையாயின், நீயும் என் காதலையுடையையாதி ('மறு உடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய்', என்பதாம். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு.)மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி. 1119 (இதுவும் அது.) மதி - மதியே; மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் -இம்மலர் போலும் கண்ணையுடையாள் முகத்தை நீ ஒக்க வேண்டுதியாயின்; பலர் காணத்தோன்றல் - இதுபோல யான் காணத் தோன்று; பலர் காணத் தோன்றாதொழி. (தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டும், பலர் காணத்தோன்றலை இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது என்பதாம்.)அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். 1120 (உடன் போக்கு உரைத்த தோழிக்கு அதனது அருமை கூறி மறுத்தது.) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் - உலகத்தாரான் மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப்பூவும் அன்னப்புள்ளின் சிறகும் ஆகிய இரண்டும்; மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும்.
|